கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் கோரைப் பயிர் அதிகளவு சாகுபடி
முகாமிட்டு கொள்முதல் செய்யும் வெளிமாநில வியாபாரிகள்
கரூர் : கரூர் மாவட்டம் நெரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோரை பயிர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று கரையோர பகுதிகளான தோட்டக்குறிச்சி, வாங்கல், நெரூர், சோமூர், திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளில் வாழை, நெல், மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக இந்த பகுதிகளில் கோரை பயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாய் உற்பத்தி மற்றும் கட்டுமான பயன்பாட்டிற்காக கோரை பயிர் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு இதன் தேவை என்பதால், பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நெரூர் பகுதிகளில் முகாமிட்டு, தங்களுக்கு தேவையான கோரை பயிர்களை வாங்கிச் செல்கின்றனர்.
கோரைப் பயிரை பொறுத்தவரை, நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், ரெங்கநாதன்பேட்டை போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டுக்கு இரண்டு முறை சாகுபடி செய்யும் வகையில் கோரை பயிர் இந்த பகுதியில் விளைவிக்கப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை விளைவிக்கப்படும கோரை பயிர், நன்கு காய வைத்து, பின்னர் கட்டுக்களாக கட்டி, அதனை வியாபாரிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.