ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
உணவுகளை வீணடிக்கும் மக்கள்… ஒரே ஆண்டில் 150 கோடி மெட்ரிக் டன்… ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.-வின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவுப் பொருட்களை வீணாக்குவதில், வீடுகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன. மேலும் சேவை நிறுவனங்கள் 28 சதவீத உணவுப் பொருட்களையும், சில்லறை விற்பனை நிறுவனங்கள் 12 சதவீத உணவுப் பொருட்களை வீணடிக்கின்றன.
2019-ஆம் ஆண்டில், உற்பத்தி செய்யப்பட்ட 93.1 கோடி மெட்ரிக் டன் உணவுப் பொருள் வீணடிக்கப்பட்டிருந்தது. இது மொத்த உணவு உற்பத்தியில் 17 சதவீதமாகும். இது தொடர்பான விவரம் 2021-ஆம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை குறைக்கும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
வீடுகள், உணவு தொடர்பான சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.