விதி 49-ஓ பற்றி அதிகாரிகள் விளக்கம்.
வாக்கு சாவடிக்குள் சென்ற பிறகும் ஓட்டு போடாமல் திரும்பலாம்: விதி 49-ஓ பற்றி அதிகாரிகள் விளக்கம்.
ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து, படிவங்களில் கையெழுத்திட்ட பிறகும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. அதுபோன்ற வாக்காளர்களை ஓட்டு போடும்படி, அதிகாரிகள் கட்டாயப்படுத்த முடியாது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
தேர்தல் சட்ட விதிகளின்படி, 49ஓ என்ற பிரிவு உள்ளது. இதன்படி, ஓட்டுச்சாவடிக்குள் சென்று, பெயரை பதிவு செய்தபிறகும், ஓட்டுப்போட மறுக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மறுக்கும் வாக்காளரை, ஓட்டு போடும்படி தேர்தல் அதிகாரிகள் கட்டாயப்படுத்த முடியாது. இதற்காக, படிவம் 17ஏ-யில், ஓட்டளிக்க மறுத்துள்ளார் என்பதை குறிப்பிட்டு, வாக்காளரின் கையெழுத்தை பெற வேண்டும்.
இந்த சட்ட விதி சில ஆண்டுகளாக உள்ளது. பெரும்பாலான வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஆனால், 49ஓ உரிமையை அதிகமானோர் பயன்படுத்தினாலும், தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படாது. பதிவான ஓட்டுகளில் அதிகம் பெற்றவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
இந்த, 49ஓ உரிமையை ஒருவர் பயன்படுத்தும்போது, படிவத்தில் கையெழுத்திடுவதால் அவருடைய அடையாளத்தை கட்சிகள் அறிந்து கொள்ள முடியும். இதை தவிர்க்கவே, ‘நோட்டா’ எனப்படும் ‘பட்டியலில் உள்ள யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை’ என்பது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019 தேர்தலில், நாடு முழுதும், 1,389 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், இவை அனைத்தும், 49ஓ பயன்படுத்தப்பட்டவையா என்பதற்கான விபரங்கள் இல்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நோட்டா என்பது அந்த தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்பதை வாக்காளர் உணர்த்தும் வழி. ஆனால், 49ஓ என்பது இந்த தேர்தல் அமைப்பே பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் வழியாகும்.