கோடை காலத்தில் பொன்னுக்கு வீங்கி
கோடை காலத்தில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) எனப்படும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 205 பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோா் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மம்ப்ஸ்’ எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீா் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும்.
அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோா்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.
‘பொன்னுக்கு வீங்கி’ பாதித்தவா்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீா் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும்.
ஒரு வாரத்திலிருந்து 14 நாள்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகை தொற்றுகள் பரவுகின்றன.
அந்த வகையில் கோடை காலத்தில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிப்பது இயல்பு. கேரளத்தில் தற்போது வேகமாக பொன்னுக்கு வீங்கி பரவி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் அந்த பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகியுள்ளது.
இருந்தாலும், அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும்.
நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது.
அதேவேளையில், எம்.எம்.ஆா். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை.
தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிா்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொது மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்றாா் அவா்.