‘லோக்சபா தேர்தல் மே 15 — 31 வரை

மக்களவை தேர்தலால் இளங்கலை படிப்பு க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை.

‘லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 15 — 31 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இளங்கலை, ‘க்யூட்’ நுழைவு தேர்வு தேதிகளில் மாற்றமில்லை’ என, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது.

மத்திய பல்கலைகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான, ‘க்யூட்’ எனப்படும் பல்கலை பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

இந்தாண்டுக்கான க்யூட் நுழைவுத்தேர்வு மே 15 – 31 வரை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

லோக்சபா தேர்தல் தேதிகளை பொறுத்து, தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. ஏப்., 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவுகள் நடக்கின்றன.

ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இதை தொடர்ந்து, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மே 15 – 31 வரையிலான தேதிகளில், இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தும்.

இடையில், மே 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டும் தேர்வும், தேர்தலும் ஒரே நாளில் வருகின்றன.

மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான மார்ச் 26க்கு பின், எத்தனை பேர் அந்த நாளில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர் என்பதை அறிந்த பின், அது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்