பாஜ நிர்வாகிகள் கைது
இரண்டு கோடி ரூபாய் கொடுக்கா விட்டால் தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் உள்பட 4 பேரை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் உள்ளார். தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார்.
ஆடுதுறையை சேர்ந்த வினோத், தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாக பணியாற்றும் திருவையாறு செந்தில் என்பவருடன் கூட்டு சேர்ந்து தங்களிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச வீடியோ, ஆடியோக்கள் உள்ளது. தாங்கள் கேட்கும் ரூ.2 கோடி பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்கள் மற்றும் டிவி சேனல்களில் ஆபாச வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டு ஆதீன மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம்.
இதுதொடர்பாக திருவெண்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த விக்னேஷ் உங்களிடம் பேசுவார். பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் விக்னேஷ் மூலம் ரவுடிகளை வைத்து மடத்தை சேர்ந்தவர்களை கொலை செய்ய தயங்க மாட்டோம் என்று மிரட்டினார். உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக அவரிடம் தெரிவித்தேன்.
நேற்று முன்தினம் இரவு குடியரசு, வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரத்தை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான வினோத் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜ செயலாளர், விக்னேஷ் சீர்காழி ஒன்றிய முன்னாள் பாஜ தலைவர், ஸ்ரீ நிவாஸ் பாஜ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.