நன்றி சொன்ன கல்லூரி முதல்வர்
மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன மேலாளர் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக அளிக்க முன்வந்ததற்கு அரசு மருத்துவ கல்லூர் முதல்வர் கைக்கூப்பி நன்றியை தெரிவித்தார்.
திருவாரூர் நகரத்துக்கு உட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் குணசேகரன் (44). இவர் திருவாரூரில் உள்ள எக்விடாஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுதா என்கிற மனைவியும் ஐந்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதையடுத்து கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு குணசேகரன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையின் ரத்தம் உறைந்து மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த குணசேகரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இதன்பின்னர் இன்று அதிகாலை முதல் பத்து மருத்துவர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் குணசேகரின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அதில் இரண்டு சிறுநீரகங்களும் மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கல்லீரல் மற்றும் தோல் ஆகியவை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. கண்கள் இரண்டும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.