சென்னை குடிநீர் பிரச்சினை தீர்ந்தது

கடல் நீரை குடிநீராக்கும் பிரம்மாண்ட திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் அரசு பொறுப்பேற்று முதன்முதலில் கவனித்த துறை மட்டுமல்ல, வளர்த்த துறை இந்தத் துறை. அதோடு என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான கடல் நீரை குடிநீராக்கக்கூடிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் ஓ.எம்.ஆரில் இருக்கின்ற ஐ.டி. நிறுவனப் பகுதிகளில் இருக்கின்ற சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.