6000 வெள்ள நிவாரணம்
சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதால் 6000 வெள்ள நிவாரணம் இதுவரை பெறமுடியாத 5.5 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றத்தில் உள்ளன. அரசு அவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 36 மணி நேரம் இடைவிடமால் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் பல அத்தியாவசிய பொருட்களை இழந்தனர். இதுதவிர கார், இருசக்கர வாகனங்கள் பல வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் முடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் ஆனது.