புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிநியமன ஆணை வழங்கினார். இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிநியமன ஆணையினை வழங்கினார்.
அதே போல் கடந்த 11.02.2024 அன்று 977 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த துறையில் காலியாக இருக்கிற ஆய்வக நுட்புனர்கள் பணியிடங்கள் 332 நிரப்புவதற்குறிய நடவடிக்கைகளை முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் அதற்கான அனைத்து பணிகளையும் முடித்து நேற்றைக்கு முன்தினம் அந்த பட்டியல் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரிடம் தரப்பட்டது.
கிராம சுகாதார செவிலியர்கள் பணிநியமனம்
இன்னமும் இந்த துறையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5100 பேரை தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) செய்துக் கொண்டிருக்கிறது. அப்பணிகளும் இறுதி நிலைக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளையெல்லாம் நமது துறையின் செயலாளர் நல்ல தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலோடு கடந்த 6.02.2024 அன்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அந்த 1021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் பணியில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 90 சதவிகித்திற்கு மேலான மருத்துவர்கள் தற்போது தமது பணியிடங்களுக்குச் சென்று பணியினை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது கடந்த 06.02.2024 அன்று 1021 மருத்துவர்களுக்கும், 11.02.2024 அன்று 977 தற்காலிக செவிலியர்களுக்கும், இன்று 332 ஆய்வக நுட்புனர்கள் என ஏறத்தாழ 2,200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் கடந்த 20 நாட்களிலேயே நிரப்பப்பட்டுள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.