கூலித் தொழிலாளி குடும்பத்தில் 2 நீதிபதிகள்

அரசுப் பள்ளியில் படித்தவர் நீதிபதி தேர்வில் வென்றுள்ளார். இதுவே முக்கியமான செய்தி. அதைத்தாண்டி இவர் கூலித்தொழிலாளி மகள் வேறு. அவர் இன்று நீதிபதி தேர்வில் வென்றுள்ளார்.

அதுதான் அதிசயமான செய்தி. இவரை ஒரு படி முந்திச் சென்றுள்ளார் காஞ்சிபுரம் இளைஞர் ஒருவர். அவர் சலவைத் தொழிலாளி மகன். அவர் இன்று நீதிபதி ஆகி இருக்கிறார். இவர்களைப் போலவே 36 வயதில் கூலித்தொழிலாளி மகன் ஒருவர் நீதிபதி ஆகியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் அருகே உள்ளத்து திருத்துறைப்பூண்டி. அதன் அருகே உள்ளது நாலாநல்லூர் என்ற சின்ன கிராமம். அங்கே வசித்து வரும் கணேசன் மற்றும் சந்திரா தம்பதியின் மகள் சுதா. இவரது பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தத் தம்பதியின் வீடு கூரைக் கொட்டகையைவிடக் கொஞ்சம் வசதிகள் குறைந்ததுதான். பூசப்படாத கல் சுவர் நான்கு சுற்றிலும் ஒப்புக்கு நிற்கிறது. மேலே நைந்து போன நான்கு கீற்றுகள். அதற்குள் இரண்டு நபர்கள் சேர்ந்து ஒன்றாகப் படுக்க முடியாத அளவுக்குச் சின்ன இடம். இதுதான் சுதாவின் வீடு. இந்த மாதிரியுள்ள ஒரு குடும்பச் சூழலிலிருந்து படித்து முன்னேறி இன்று உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று நீதிபதியாகியுள்ளார் சுதா.

ஆகவே நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை மேற்கொண்டார். அதில் வெற்றிபெற்றதும், திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். அதன்பிறகு டிஎன்பிஎஸ் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் பங்கேற்று இப்போது நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட சரியாகக் கிடைக்காத சுதா, இன்று இந்தியாவே வியக்கும் நீதித்துறைக்குள் ஒரு நீதி தேவதையாகக் காலடி எடுத்துவைத்துள்ளார்.