ஏ.சி. திருலோகச்சந்தர் நினைவஞ்சலி தினம்..

தமிழ்த் திரையின் நட்சத்திர இயக்குனர்
ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்களின்   06ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்..!

திருலோகச்சந்தர் 1930.06.11 அன்று வேலூரில் ஆர்கோர்ட் செங்கல்வராய முதலியாருக்கு மகனாகப்பிறந்தார்.
ஐ.ஏ.எஸ்.படித்து பணியாற்ற விரும்பியவரை சினிமா தத்தெடுத்து  கொண்டது. 1952 இல்
எம்ஜிஆர் சிறு வேடத்தில்  நடித்த “குமாரி”படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது சினிமா வாழ்வை ஆரம்பித்தார்.பின் நடிகர் அசோகன் மூலம் ஏவியெம்மில் அறிமுகமானார்.அவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஏவியெம்மின் “வீரத்திருமகன்”.எம்ஜிஆரின் 50 வது படமான “அன்பே வா”படத்தை ஏவியெம்முக்கு வெற்றிப்படமாக அளித்தவர் திருலோகச்சந்தர். ஆங்கில படத்திற்கு நிகராக இவர் இயக்கிய திரில் படமான ஏவியெம்மின்  “அதே கண்கள் “இமாலய வெற்றி பெற்றது.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலுக்கு நன்கு தீனி போட்டவர் திருலோகச்சந்தர். தெய்வமகன்,பாபு,தங்கை,
எங்கிருந்தோ வந்தாள்,எங்கமாமா,
இருமலர்கள்,என் தம்பி,அன்பளிப்பு,திருடன்,தர்மம் எங்கே,பாரத விலாஸ்,அன்பே ஆருயிரே,டொக்டர் சிவா,அவன்தான் மனிதன்,பைலட் பிரேம்நாத்,விஸ்வரூபம்,லாரி ட்ரைவர் ராஜாக்கண்ணு,வசந்தத்தில் ஓரு நாள்,குடும்பம் ஒரு கோயில்,அன்புள்ள அப்பா,போன்ற படங்களையும்,வீரத்திருமகன்,நானும் ஒரு பெண்,ராமு,பெண் ஜென்மம்,அவள்,தீர்க்க சுமங்கலி,பத்ரகாளி,காக்கும் கரங்கள் என பல படங்களையும் இயக்கியவர் இவர். தமிழ்,ஹிந்தி,தெலுங்கு மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான “தெய்வமகன்” முதன் முதலாக தமிழ் திரையில் ஒஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. “பைலட் பிரேம்நாத்” படப்பிடிப்பின் போது திருலோகச்சந்தர் சிவாஜி கணேசனுடன்  இலங்கை வந்தார்.”இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ”பாடல் காட்சி பேராதனை பூங்காவில் படமாக்கப்பட்ட போது இவரை நேரில் சந்தித்தேன்.நல்ல உயரம்,ஆஜானுபாகுவான தோற்றம்,அனைவரிடமும் குழந்தையைப் போல் பழகும் தன்மை கொண்டவர்.இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் திருலோகச்சந்தர். பல விருதுகளை பெற்ற இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உற்ற நண்பராவார்.நடிகர் சிவகுமாரை
“காக்கும் கரங்கள் “படத்தில் அறிமுகப்படுத்தியர் இவரே.
“தீர்க்க சுமங்கலி”திரைப்படத்தில் முத்துராமன்,கே.ஆர்.விஜயா வின் நடிப்பாற்றலை புடம் போட்டு காட்டியவர் திருலோகச்சந்தர். இவர் மனைவி பெயர் பாரதி.மல்லிகேஷ்வரி,ஸ்ரீநிவாஸ்,ராஜ்சந்தர்,
பிரேம்திலக் என நான்கு வாரிசுகள்.
2016.06.15 அன்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.