பள்ளிக்கல்வி துறை தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சட்டமன்றத் தேர்தல் பணிகளில் வழக்கமாக ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் விவரங்களை சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பட்டியலை இறுதி செய்து மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்டியல் சமர்ப்பித்தவர் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை திருத்தம் செய்து அனுப்பவேண்டும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பட்டியலில் சேர்க்க கூடாது.

அதேபோல் ஆசிரியரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்கள் கட்டாயம் குறிப்பிடவேண்டும். மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கூடாது. விலக்கு அளிக்கப்படும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.