ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு; இந்திய தூதரக சேவைகள் நிறுத்தம்!

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. 
ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்கள் இந்த கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா காரணமாக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
ஷாங்காய் நகரில் கொரோனா ஊரடங்கு காரணமாக, ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்திய துணைத் தூதரகம், தற்காலிகமாக தனது சேவைகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
அங்கு தூதரக சேவைகளை நேரடியாக வழங்கும் நிலையில் இல்லை என சீன தலைநகர் பீஜிங்கில் செயல்பட்டு வரும்  இந்திய தூதரகம் அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே முக்கிய அலுவலக பணிகளை மேற்கொள்வர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்தியர்கள் தூதரகத்திற்கு நேரடியாக சென்று சேவைகளை பெற முடியாது.
ஷாங்காய் நிலவரத்தின் காரணமாக, கிழக்கு சீன பிராந்தியத்தில் உள்ள இந்திய குடிமக்கள் அவசர தூதரக சேவைகளைப் பெற பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர சேவைகளை பெற கீழ்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது – (+86 189 3031 4575/ 183 1716 0736).

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.