டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு!
உலகின் பெரும் பணக்காரரும் ‘டெஸ்லா’ ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார்.
டுவிட்டரில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் கடந்த மாதம் இறுதியில் கூறியிருந்த நிலையில், டுவிட்டர் நிறுவன பங்குகளை அவர் வாங்கினார். இதன்மூலம் எலான் மஸ்க் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைந்து, டுவிட்டரில் சாத்தியமான மாற்றங்களை கொண்டுவர பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே எலான் மஸ்க் தங்கள் நிர்வாக குழுவில் இணைவார் என டுவிட்டர் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், எலான் மஸ்க் அதை மறுத்துவிட்டார். டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய தனக்கு விருப்பமில்லை என அவர் கூறிவிட்டார்.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஏப்ரல் 9-ந் தேதி முதல் அவர் நிர்வாக குழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக செயல்படவிருந்தார். ஆனால், அதே நாள் காலை, நிர்வாக குழுவில் இணைய போவதில்லை என அவர் பகிர்ந்து கொண்டார். இந்த முடிவு நல்லதுக்கு என நான் நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.