முதல்வருடன் அன்புமணி சந்திப்பு!
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட 7 பேர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
பின்னர் அன்புமணி கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை எல்லாம் முதல்வரிடம் கூறி அடுத்த கட்டமாக எங்கள் கோரிக்கை என்ன என்பதை விளக்கமாக சொல்லும் வகையில் முதல்வரை சந்தித்தோம். முதல்வருடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது. மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது எனவும், உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் சாதகமான அம்சங்களை கூறியுள்ளது என்பதை விளக்கமாக கூறினோம்.
வன்னியர் இட ஒதுக்கீடு புள்ளி விவரம் தான் சிக்கலாக உள்ளது. புள்ளிவிவரம் நம்மிடம் உள்ளது. அதனை சேகரித்து சட்டசபையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் கூறியுள்ளார். தமிழக அரசு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து தான் வாதாடியது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.