புதிய எக்ஸ்.இ., வைரஸ் பற்றி பயம் வேண்டாம்: சுகாதார செயலர்!!

சென்னை: வைரஸ் உருமாறுவது இயல்பு தான். ஒமைக்ரான் எக்ஸ் இ வகை கோவிட் தமிழகத்தில் உறுதியாகவில்லை. பொது மக்கள் வீண் பதற்றம் அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாஸ்க் அணிவது குறித்து மக்களிடம் தவறான புரிதல் உள்ளது. பொது இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும். தமிழகம் முழுவதும் 110 கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்திற்காக பயந்து மாஸ்க் அணிவதற்கு பதில், மக்கள் விழிப்புணர்வு புரிதலோடு மாஸ்க் அணிய வேண்டும். புதிய வகை கோவிட் எச்சரிக்கை உள்ளதால், பாதுகாப்பு விதிகளில் அலட்சியம் வேண்டாம். பொது இடங்களில், கோவிட் தடுப்பு விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

கோவிட், ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என எண்ணக் கூடாது. இன்னமும் 20 – 30 பாதிப்புகள் இருந்து கொண்டு உள்ளது. கோவிட் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட வேண்டாம். தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர, மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மற்றபடி மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் எனக்கூறவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.