மார்பகப் புற்றுநோய்!!!
சமீபகாலமாக, உலகளவில் எண்ணற்ற பெண்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். சாதாரணமாக கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஒன்றாக இருந்தாலும் பெண்களைத்தாக்கும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக இது பார்க்கப்படுகிறது. மிக அரிதாக இது ஆண்களையும் பாதிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.
மார்பகப் புற்றுநோய் என்பது மார்புப் பகுதியில் உள்ள செல்களின் ஒரு வீரியம் மிக்க கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் ஏற்படும் கட்டி ஆகும். இது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி உருவாவதில் தொடங்கி மிக வேகமாக மற்ற உறுப்புகளுக்கு பரவும். மார்பகத்தின் ஒவ்வொரு கட்டியும் மார்பக புற்றுநோயாக மாறுவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மார்பகப்புற்றுநோய் பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கிறது. இந்தியாவில், மார்பகப் புற்றுநோயானது அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2007ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. ஏறக்குறைய பாதி பெண்கள் 45 வயதுக்கு குறைவானவர்கள். 2017 ம் ஆண்டில், மார்பக புற்றுநோயாளிகளின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரிக்கிறது. 2025 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்தில் 190 முதல் 260 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று பகுப்பாய்வு கூறுகிறது.
காரணங்கள் ஆயுர்வேதத்தின்படி, உடல் திரிதோஷத்தை அடிப்படையாகக் கொண்டது, இதில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவை அடங்கும். இந்த தோஷங்களில் ஏற்றத்தாழ்வு நமது ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு, பல நோய்களுக்கு வழிவகுக்கும். இவ்வாறே புற்றுநோயும் ஏற்படுகிறது.மார்பகப் புற்றுநோய்க்கு சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றாலும் சில காரணங்களால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவை:
* பரம்பரை காரணம்
பெற்றோர்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பின் சந்ததியினருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இளைஞர்களுக்கு ஏற்படும் இப்புற்றுநோய்க்கு பரம்பரை காரணியே பிரதானமாக அமைகிறது. குடும்பத்தில் முன்னோர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு இருப்பின் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மார்பக புற்றுநோய் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இந்த நோயின் குடும்ப வரலாறு இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
* உணவுப்பழக்கம்
புற்றுநோய் ஏற்படுபவர்களில் மூன்றில் ஒருவருக்கு தகாத உணவுப்பழக்கமே காரணமாகிறது. தற்போதுள்ள உணவுகள் பதப்படுத்தவும், சுவையூட்டவும், நிறத்திற்கும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதால் உணவு வகைகள் மாசடைந்து உடலுக்கு புற்றுநோய் மற்றும் இதர பாதிப்புக்களை உருவாக்குகிறது. உணவுப்பொருட்கள் விளைவிக்கவும், பாதுகாக்கவும் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை அடைகின்றன.
* கதிர்வீச்சு
எக்ஸ்ரே, ஸ்கேன் முதலிய கதிரியக்கத்திற்கு அடிக்கடி உட்படுபவர்களுக்கு, குறிப்பாக அத்துறையில் பணியாற்றுபவர்களை புற்றுநோய் அதிகம் தாக்குகிறது.
* சூரிய ஒளி
அதிகளவு சூரிய ஒளி அதிக வெப்பத்துடன் தோலில் படுவதால் சில வகையான தோல் புற்றுநோய் ஏற்படும்.
* ரசாயனப்பொருட்கள்
வேதித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள், அச்சகம், பட்டாசு தயாரிப்பில், தீப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
* ரசாயன உரங்கள்
அதிக விளைச்சலுக்காகவும் பூச்சிகளை அழிக்கவும் பயிர்களுக்கும், காய்கறிகளுக்கும் அதிக ரசாயனப்பொருட்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருகிறது.
* புகையிலை பயன்பாடு
தற்போது நிகழும் 10 புற்றுநோய் இறப்புகளில் 3 இறப்பு புகையிலைப் பொருட்களால் ஏற்படுகிறது.
* மது அருந்துதல்
மது அருந்துதல் ஒரு முக்கிய காரணமாகும். மதுவால் மார்பக, கல்லீரல், வாய், தொண்டை புற்றுநோய் ஏற்படும்.
* எலக்ட்ரோமேக்னடிக் பொருட்கள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன், கணினி, ஃப்ரிட்ஜ் முதலிய எலக்ட்ரோமேக்னடிக் பொருட்களில் இருந்து உருவாகும் கதிர்வீச்சினால் புற்றுநோய் உருவாக வாய்ப்புண்டு.
* கருத்தடை மாத்திரைகள்
வாய்வழியாக எடுக்கப்படும் கருத்தடை மாத்திரைகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உடல் மாற்றங்கள்
ஒரு மார்பகமானது பாதிக்கப்பட்டிருப்பின் மற்றொரு மார்பகமும் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் 10 வயதிற்குள்ளாகவே விரைவில் பருவமடையும் பெண்களுக்கும், 55 வயதிற்கு மேல் மாதவிடாய் நிற்காமல் இருப்பவர்களுக்கும் இந்நோய் வர வாய்ப்புள்ளது.
* மரபணுக்கள்
பெண்களுக்கு BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்கள் மார்பகப் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. மற்றும் பிற மரபணு மாற்றங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கலாம்.
* வயதான காலத்தில் கர்ப்பம்
முதல் குழந்தையை 35 வயது வரை கருத்தரிக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
* ஹார்மோன் சிகிச்சை
மாதவிடாய் நின்ற பின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
*கர்ப்பம் இல்லை
தங்களின் முழு காலத்திற்கு கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள்
*மார்பகத்தை சுற்றிலும் மாறுபட்ட, கடினமான கட்டி போன்று தென்படுதல்.
*மார்பகத்தில் இருந்து ரத்தம் வருதல்.
*மார்பகத்தில் தீவிர வலி மற்றும் அரிப்பு உணர்வு.
*மார்பகத்தில் வீக்கம் அல்லது குழிவு ஏற்படுதல்.
*முலைக்காம்பு அளவு, வடிவம் மற்றும் நிறம் மாற்றம்
*முலைக்காம்பானது தலைகீழாக மாறுதல்.
*முலைக்காம்பிலிருந்து ரத்தம் அல்லது பால் வெளியேறுதல்
*மார்பகம் மற்றும் முலைக்காம்புகள் சிவந்து காணப்படுதல் அல்லது நிறமாற்றம் அடைதல்.
*அக்குள் பகுதியில் கட்டி போன்று தென்படுதல்.
*மார்பைச் சுற்றி உள்ள தோலானது செதில்கள் போல் உரிந்து வருதல். மேலும் முலைக்காம்பு மற்றும் மார்புப் பகுதியில் உள்ள தோலானது கடினமாக மாறுதல்.
*மார்பகத்தின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தென்படுதல்.
நோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை மேமோகிராம், மார்பக MRI, பயாப்ஸி, ரத்தப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட், மருத்துவர் மேற்கொள்ளும் மார்பக உடல் பரிசோதனை, மார்பக சுய பரிசோதனை ஆகியவை இந்நோயை சரியாக முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவுகின்றன.
மார்பக சுய பரிசோதனை
மார்பக சுய-பரிசோதனை என்பது மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிரச்சனைகளைக் கண்டறிய ஒரு பெண் வீட்டில் செய்யும் ஒரு சோதனை முறையாகும். மார்பக புற்றுநோயைக் கண்டறிவதில் அல்லது உயிரைக் காப்பாற்றுவதில் மார்பக சுய பரிசோதனை பெறும் பங்கு வகிக்கிறது.மாதவிடாய் தொடங்கி 3 முதல் 5 நாட்களுக்குப் பிறகு மாதாந்திர சுய மார்பகப் பரிசோதனை செய்வது சிறந்த நேரமாகும். ஒவ்வொரு மாதமும் ஒரே நேரத்தில் செய்வது சிறந்தது. மாதாந்திர சுழற்சியில் இந்த நேரத்தில் மார்பகங்கள் மென்மையாகவோ அல்லது கட்டியாகவோ இருக்காது. மாதவிடாய் நின்றிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரே நாளில் இந்த சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
* நன்கு ஒளிரும் அறையில் ஒரு பெரிய கண்ணாடியின் முன் இடுப்பில் இருந்து ஆடையின்றி நிற்கவும்.
*கட்டிகள் அல்லது மாற்றங்களை உணர படுத்துக் கொள்ளுங்கள். காலர்போன் முதல் ப்ரா கோட்டின் அடிப்பகுதி மற்றும் அக்குள் முதல் மார்பகம் வரை உள்ள அனைத்து திசுக்களையும் உணர்ந்து உங்கள் முழு மார்பகத்தையும் சரிபார்க்கவும்.
* விரல் நுனியை மட்டும் பயன்படுத்தாமல், மூன்று நடு விரல்களை முழுமையாக பயன்படுத்தவும். உங்கள் வலது மார்பகத்தை சரிபார்க்க உங்கள் இடது கையின் நடு விரல்களைப் பயன்படுத்தவும். உங்கள் இடது மார்பகத்தை சரிபார்க்க உங்கள் வலது கையின் நடு விரல்களை பயன்படுத்தவும்.
* சிறிய நாணய அளவிலான வட்டங்களில் உங்கள் விரல்களை மெதுவாக நகர்த்தவும்.
*உங்கள் மார்பக திசுக்களை உணர மூன்று வெவ்வேறு நிலை அழுத்தங்களைப் பயன்படுத்தவும்.
* தோல் மேற்பரப்புக்கு நெருக்கமான திசுக்களை உணர லேசான அழுத்தம் தேவைப்படுகிறது. நடுத்தர அழுத்தம் சிறிது ஆழமாக உணரப் பயன்படுகிறது, மேலும் உறுதியான அழுத்தம் உங்கள் மார்பு எலும்பு மற்றும் விலா எலும்புகளுக்கு அருகில் உங்கள் திசுக்களை உணர பயன்படுகிறது.
*ஒரு குறிப்பிட்ட கட்டி பற்றி சந்தேகம் இருந்தால், உங்கள் மற்ற மார்பகத்தை சரிபார்க்கவும். மற்ற மார்பகத்தில் அதே பகுதியில் ஒரே மாதிரியான கட்டியை நீங்கள் கண்டால், இரண்டு மார்பகங்களும் சாதாரணமாக இருக்கலாம்.
*படுத்திருக்கும் போது உங்கள் மார்பகங்களை பரிசோதிப்பதுடன், குளிக்கும்போதும் அவற்றைச் சரிபார்க்கலாம். சோப்புடன் கூடிய விரல்கள் மார்பகத்தின் குறுக்கே எளிதாக சறுக்கி, மாற்றங்களை உணர எளிதாக்கலாம். குளிக்கும்போது, உங்கள் தலைக்கு மேல் ஒரு கையை வைத்து, அந்த பக்கத்தில் உங்கள் மார்பகத்தை மற்ற கையால் லேசாக சோப்பு போடவும். பின்னர், உங்கள் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக உங்கள் கையை உங்கள் மார்பகத்தின் மீது நகர்த்தவும், ஏதேனும் கட்டிகள் அல்லது தடிமனான பகுதிகளை கவனமாக உணருங்கள்.
*உங்கள் மற்ற மார்பகத்தில் இதே சுய பரிசோதனையை மீண்டும் செய்யவும்.
*மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. மார்பகத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுமே புற்றுநோய் இல்லை அதனால் பதட்டப்பட வேண்டாம்.
சிகிச்சை
மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதை விட அதை வராமல் காப்பதே சிறந்ததாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தவும் பரவுதலை தவிர்க்கவும் வாழ்நாளை நீட்டிக்கவும் இயலும். பாரம்பரிய இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், 5000 ஆண்டுகளுக்கும் மேலான செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் பல எண்ணற்ற நாட்பட்ட வியாதிகளில் நல்ல பலன் தருவதால் ஆயுர்வேதம் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆயுர்வேதத்தில் மார்பக புற்றுநோய்க்கான பல நம்பிக்கைக்குரிய தீர்வுகள் உள்ளன. மார்பக புற்றுநோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருப்பது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் இந்நோயில் மூன்று தோஷங்களையும் கட்டுப்படுத்தும் சிகிச்சையும், ரத்தத்தினை சுத்தி செய்யும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வியாதி உள்ளதாக ஐயம் இருந்தால் தக்க பட்டதாரி ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதே சிறந்தது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல மூலிகைகள் பல புற்றுநோய்களை தடுப்பவையாகத்தான் அமைந்திருக்கிறது. அதில் குறிப்பாக பூண்டு, மஞ்சள், துளசி, நெல்லிக்காய், இஞ்சி, முருங்கை, வில்வம், வெந்தயம், வேம்பு, கீழாநெல்லி, நெருஞ்சில், அசோகு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவை மார்பக புற்றுநோயை தவிர்க்க மட்டுமில்லாமல் குணப்படுத்தவும் உதவுவதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக கஷாய மருந்துகளான குக்குலு திக்தக கஷாயம், அர்தவில்வ கஷாயம், வாரனாதி கசாயம், சித்ரககிரந்தியாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், சட்தரண கஷாயம் ஆகியவை காலை மாலை உணவிற்கு முன் வெந்நீரில் கலந்து கொடுக்க நல்ல பலன் காணலாம். சூரணம் மருந்துகளான திரிபலா சூரணம், காகமாச்சி சூரணம், குக்குலு பஞ்சபல சூரணம், நரசிம்ம சூரணம் ஆகியவை கஷாயத்திற்கு மேம்போடியாக சேர்த்துக் கொடுக்க கட்டி படிப்படியாக குறைவதைக் காணலாம். மேலும் மாத்திரைகளான காஞ்சனார குக்குலு, திரிபலா குக்குலு, அம்ருதா குக்குலு நல்ல பலன் தருகிறது. நெய் மருந்துகளான குக்குலு திக்தக க்ருதம், வாரனாதி க்ருதம், ஷட்பல க்ருதம் ஆகியவை கேரளா வைத்தியசாலைகளில் கொடுக்க நல்ல பலன் கொடுக்கிறதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.