டிஎஸ்பி ஆன மகளுக்கு சல்யூட்

டிஎஸ்பி ஆன மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை!

ஆந்திர மாநிலத்தில் பணியிலிருந்த தனது டிஎஸ்பி மகளுக்கு மகிழ்ச்சியுடன் அவரது தந்தை சல்யூட் அடித்தார்.

ஆந்திர பிரதேசம் திருப்பதியில் காவல் ஆய்வாளராக உள்ளவர் ஒய்.ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் டிஎஸ்பி ஆக உள்ளார்.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் ‘Ignite’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டிஎஸ்பி ஜெஸி பிரசாந்தி திருப்பதி காவல் பயிற்சி மையத்திற்கு வந்திருந்தார்.

மகளுக்கு சல்யூட்!

அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர், போலீஸ் சீருடையில் வந்திருந்த தனது மகள் பிரசாந்தியை பார்த்து பெருமிதத்துடன் சல்யூட் அடித்து வரவேற்றார்.

ஆந்திர பிரதேச காவல் துறை தனது தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம்தான் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதுவே முதல்முறை!

பணியில் இருக்கும்போது தந்தையைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்று பிராந்தி கூறினார். தனக்கு சல்யூட் அடிக்க வேண்டாம் என்று தந்தையிடம் கூறியதாகவும் தந்தை தனக்கு சல்யூட் அடித்தபோது சற்று அசவுகரியமா இருந்ததாகவும் கூறினார். இருப்பினும், தந்தை சல்யூட் அடித்ததும் பதிலுக்கு தானும் தந்தைக்கு சல்யூட் அடித்ததாக அவர் தெரிவித்தார்.

நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும்!

மேலும் அவர் கூறுகையில், “நான் ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்றே என் தந்தை விரும்பினார். இருப்பினும், என்னால் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதைத்தொடர்ந்து குரூப் 1 தேர்வு எழுதி, சேர்ச்சி பெற்றேன். நாட்டுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே என் பெற்றோர் என்னிடம் கூறுவார்கள். என் தங்கை ஆந்திராவில் உள்ள அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார்” என்றார். 2018ஆம் ஆண்டு பேட்ச் டிஎஸ்பி அதிகாரி பிரசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இது என் கடமை
இது குறித்துக் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர், “பிரசாந்தி தற்போது டிஎஸ்பியாக உள்ளார். அவர் என்னைவிட உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரி. அவருக்கு சல்யூட் செய்வதுதான் முறை. எனவே, மற்ற அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதைப்போலவே அவருக்கும் சல்யூட் அடித்தேன். இருந்தாலும், என் மகளை வரவேற்று சல்யூட் அடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது” என்றார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.