பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் ‘உலா’; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல்!!

கோவை : பெண்கள் விடுதி வளாகத்தில் மர்ம நபர்கள், நிர்வாணமாக சுற்றுவதாக கூறி கோவை பாரதியார் பல்கலை விடுதி மாணவியர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பாரதியார் பல்கலையில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார் அளித்தனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் ஐந்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மாணவியர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் மாணவியர் விடுதி மற்றும் பல்கலை வளாகத்தில் சோதனை நடத்தினர். இதில் யாரும் சிக்கவில்லை. சம்பவம் குறித்து பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், விடுதி மாணவியர் 300க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து பல்கலை நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கோவை – மருதமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பாதுகாப்புக்கு பல்கலை துணைவேந்தர் நேரில் வந்து உறுதி வழங்க வேண்டும் என, மாணவியர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் மாணவியரை சமாதானப்படுத்தி, பல்கலை வளாகத்திற்குள் அமர வைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.