செரிமானம் சரியில்லையா? என்ன காரணம்?
மனித உடல் இயக்கத்தில். அனுதினமும் ஆயிரக்கணக்கான உணர்வுகள் உருவாவதும் மறைவதும் இடைவிடாமல் நடக்கின்றன. அவற்றில் ஒன்று பசி உணர்வு. உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் இதுதான் ஆதார சக்தி!
‘உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே!’ என்று திருமூலர் சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பசிப்பதால்தான் சாப்பிடுகிறோம். சாப்பிடுவதால்தான் உயிர் வாழ்கிறோம். நமக்குப் பசி இல்லையென்றால் அல்லது அகோரமாகப் பசித்தால் ஆரோக்கியத்தில் சிக்கல் என்று அர்த்தம். அதேபோல் சரியான நேரத்தில் சரியான அளவில் பசி எடுத்துச் சாப்பிடுகிறோம் என்றால், நம் செரிமான மண்டலம் நூற்றுக்கு நூறு சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்.
பசி என்பது என்ன?
பசி பற்றிய சரியான புரிதல் அநேகரிடம் இல்லை. அதனால்தான், ‘கையில் எடுத்து வாயில் போட்டால், சாப்பாடு ஆகிவிட்டது’ என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, கண்ட நேரத்தில் கண்டதைச் சாப்பிடுவதும், கைக்குக் கிடைத்ததை அவசரமாக அள்ளிப் போட்டுக்கொள்வதும் பலருக்கும் வழக்கமாகிவிட்டது. அப்போது பசி அவர்களுக்கு எதிரியாகி விலகிப்போகிறது.
‘உடலுக்கு உணவு தேவை’ என்று செரிமான மண்டலம் நமக்கு உணர்த்தும் அறிகுறிதான், பசி. நம் ரத்தத்தில் குளுக்கோஸ் எனும் சத்து இருக்கிறது. இதுதான் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. இது சாதாரணமாக 100 மி.லி. ரத்தத்தில் 80லிருந்து 120 மி.கி. வரை இருக்க வேண்டும். இது 80க்குக் கீழ் குறைந்தால், இந்தத் தகவல் மூளைக்குப் போகும். அங்கு ஹைப்போதலாமஸ் எனும் காவல் நிலையம் இருக்கிறது. இங்கு ‘பசி மையம்’ (Appetite Centre) என்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இருக்கிறார். உணவுத் தகவல் இவருக்கு வந்து சேர்ந்ததும், ‘வேகஸ் நரம்பு’ என்ற காவல்காரரிடம், ‘திருடனைப் பிடித்து வா!’ என்று கட்டளையிடுவது மாதிரி, ‘இரைப்பையில் பசியைத் தூண்டு’ என்று பணிப்பார். உடனே இது இரைப்பைத் தசை இயக்கங்களைத் தூண்டும். இதனால் நமக்கு வயிறு பிசைகிற மாதிரி இருக்கும். இப்போது இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். இப்போது வயிற்றைக் கிள்ளுகிற மாதிரி இருக்கும். இந்த இரண்டு உணர்வுகளும் ஒன்று சேர்வதைப் ‘பசி’ என்கிறோம்.
பசித்ததும் உணவு சாப்பிடுகிறோம். உணவிலிருந்து உடலுக்குக் குளுக்கோஸ் கிடைத்ததும், ‘திருடனைப் பிடித்துவிட்டோம்’ என்று சொல்வதைப்போல, ‘போதுமான உணவு கிடைத்துவிட்டது’ என்ற தகவல் ‘காவல்நிலைய’த்தில் உள்ள ‘திருப்தி மையம்’ (Satiety Centre) என்ற இன்ஸ்பெக்டருக்குச் சென்றுவிடும். அவர் காவல்காரரிடம், ‘ஸ்டேஷனுக்குத் திரும்பி வா!’ என்று சொல்வதைப்போல, ‘பசியை நிறுத்து’ என்பார். இந்தத் தகவல் இரைப்பைக்கு வந்ததும், தசை இயக்கங்களைக் குறைத்துக்கொள்ளும். உடனே, பசி அடங்கிவிடும். இப்போது நாம் சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறோம். “நல்ல சாப்பாடு… திருப்தியாக இருந்தது” என்று நம்மைச் சொல்ல வைக்கும் அறிவியல் ரகசியம் இதுதான்!
செரிமானம் சரியில்லை, ஏன்?
“எனக்குப் பசியே இல்லை. அதனால், சாப்பிட முடியவில்லை” என்று பலரும் புலம்புவார்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு முக்கியக் காரணம், செரிமானமின்மை. இந்தக் கோளாறைக் குலவை போட்டு வரவேற்க ஆயிரம் காரணிகள் வரிசைகட்டி நிற்கின்றன.
அதிக காரம், புளிப்பு, மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையில் மியூக்கஸ் சவ்வு சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது குறைந்துவிடும். இது செரிமானமின்மைக்கு வழிவகுக்கும். விருந்து மற்றும் விழாக்கால நேரங்களில் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதாலும் இது ஏற்படும். எண்ணெயில் வறுத்த பொரித்த இறைச்சி மற்றும் மீன், இனிப்புப் பலகாரங்கள், நெய், வெண்ணெய், வனஸ்பதி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும்போது இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கும். இதனால் செரிமான நீர்கள் உணவுடன் கலப்பது தடைபட்டு, செரிமானமின்மை தலைகாட்டும்.
அதிக அளவு காபி/ தேநீர்/ மென்பானம் குடிப்பது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை/ பான்மசாலா போடுவது போன்றவையும் செரிமானமின்மை ஏற்பட காரணமாகலாம். துரித உணவு, கலப்பட உணவு, நச்சுணவு ஆகியவை இதற்கு விதிவிலக்கல்ல! தொடர்ந்து நேரந்தவறி சாப்பிடும்போது குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் செரிமானமின்மை ஏற்படுகிறது. உணவை அவசர அவசரமாக சாப்பிட்டால், உமிழ்நீருடன் உணவு சரியாகக் கலக்காத காரணத்தால் இது தோன்றுவதுண்டு.
செரிமானமின்மை வெளிப்படுவது எப்படி?
செரிமானமின்மை பிரச்சினையை ஆளுக்கு ஆள் வெவ்வேறுவிதமாகச் சொல்வார்கள். சிலர் பசிக்கவில்லை என்பார்கள். வேறு சிலர் புளி ஏப்பம் வருகிறது, எதுக்களிக்கிறது, குமட்டுகிறது, வயிற்றில் இரைச்சல் ஏற்படுகிறது, வாந்தி வருகிறது, பித்த மயக்கம், வாயுத் தொந்தரவு என்பார்கள். இன்னும் சிலரோ வயிறு உப்புசம் என்பார்கள். கடைசியாகச் சொன்னது வயதானவர்களை ரொம்பவே படுத்திவிடும். காரணம் என்ன?
வயதானவர்களுக்கு சாதாரணமாகவே செரிமான நீர்கள் சுரப்பது குறைந்துவிடும். இதனால், குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவில் உள்ள மாவுச்சத்தை நிறையவே புளிக்கச்செய்துவிடும் அப்போது அதில் நிறைய காற்று உள்வாங்கி வயிறு உப்பிவிடும். முதல் நாள் இரவு முக்கால் பாத்திரத்துக்குக் கரைத்த இட்லி மாவு புளித்து, மறுநாள் காலையில் பாத்திரம் நிரம்பி, குப்பென்று உப்பி இருப்பதைப் பார்த்திருப்பீர்களே. அதுமாதிரிதான் இதுவும்.
செரிமானமின்மையை ஏற்படுத்தும் நோய்கள்
செரிமானமின்மையை ஏற்படுத்தும் நோய்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், 100 நோய்களுக்கு மேல் தாண்டும். அதில் சாதாரண இரைப்பை அழற்சியில் ஆரம்பித்து, அல்சர், காய்ச்சல், குடல் புழு, ரத்தசோகை, உடற்பருமன், நோய்த்தொற்று என்று நீண்டு… புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, கணைய பாதிப்பு, பித்தப்பைக் கோளாறு, சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வரை அடங்கும். அதேநேரம், செரிமானமின்மைக்கு மனம் சம்பந்தப்பட்ட காரணங்களும் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகமாகப் பசி எடுத்துச் சாப்பிடுவதும், சோகமாக இருக்கும்போது சாப்பிடும் எண்ணமே இல்லாத அளவுக்குப் பசி குறைந்துவிடுவதும் இதனால்தான். மனதுக்குள் ஏகப்பட்ட போராட்டங்களும் குழப்பங்களும் வைத்துக் கொண்டு, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை அலையாய் அலைந்து செரிமானமின்மைக்காக சிகிச்சை எடுத்தால், எந்தத் தீர்வும் கிடைக்காது.
என்ன தீர்வு?
செரிமானமின்மை ஏற்பட்டால், அது குடல் பிரச்சினையாலா, மனப் பிரச்சினையாலா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் தெரிந்துகொள்வது நல்லது. பெரும்பாலும் உணவுமுறையில் மாற்றம் செய்துகொண்டாலே இது சரியாகிவிடும். செரிமானமின்மைக்குக் காரணமாகும் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை கைகொடுக்கும்.
ஒருவருக்கு மாதக்கணக்கில் செரிமானமின்மை நீடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. மாஸ்டர் ஹெல்த் செக்கப், என்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி ஆகிய பரிசோதனைகள் தேவைப்படும். “செரிமானமின்மைக்கெல்லாமா ‘செக்கப்’ செய்வது?” என்று யோசிக்க வேண்டாம். ஆயிரத்தில் ஒருவருக்குப் புற்றுநோய், கணைய அழற்சி, குடலடைப்பு போன்ற ஆபத்துகள் அணிவகுக்கும். அந்தப் பட்டியலில் நீங்கள் இருந்துவிடக்கூடாதல்லவா?
செரிமானமின்மையை ஓரங்கட்ட!
சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட சமச்சீரான உணவை நேரத்தோடு, நிதானத்தோடு, அனுபவித்துச் சாப்பிடுங்கள்.
காரம், புளிப்பு, மசாலா மிகுந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மோர், இளநீர், பழச்சாறு, காய்கறி சூப் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைத் தினமும் சாப்பிடுங்கள்.
இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிடுங்கள்.
சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடியுங்கள்.
வாயுவை வரவேற்கும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் நடைப்பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக்குகள், ஸ்டீராய்டுகள், வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
வாழ்க வளமுடன்
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்.