இலங்கை அதிபரின் வீடு முற்றுகை; போலீஸ் வாகனத்துக்கு தீ ; போராட்டத்தில் வன்முறை!!

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்; போலீஸ் பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால், நீர் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார வினியோகம் தடைபட்டு, மின் வெட்டு நேரத்தை தினமும் 13 மணி நேரமாக, இலங்கை அரசு உயர்த்தியது. இந்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக கொழும்புவில் மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தை சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் அவர்கள் மோதல் போக்கை கடைபிடித்ததையடுத்து, துணை ராணுவ படை குவிக்கப்பட்டது. அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியும், போலீஸ் மீது கல் வீச்சிலும் ஈடுபட, போராட்டம் வன்முறையாக மாறியது. அங்கிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.