நியூ கலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை இல்லை!!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் தீவு நாடான நியூ கலிடோனியாவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நவுமியா என்ற நகரத்தை இன்று அதிகாலை 2.27 மணியளவில் தாக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 7.0 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூ கலடோனியா தீவில் இருந்து 407 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் மையம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 வினாடிகள் நிலம் அதிர்ந்ததால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்திற்கு பின்னரும் அதிர்வுகள் தொடர்ந்து வருவதால் நியூ கலிடோனியாவில் பரபரப்பு நிலவுகிறது. சுனாமி பேரலை எழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்து இருக்கும் புவியியல் ஆய்வாளர்கள், கடற்கரை பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.