பாக்.கில் இம்ரான் அரசு பெரும்பான்மை இழந்தது : கழற்றி விட்டது முக்கிய கூட்டணி கட்சி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற முக்கிய கட்சியான எம்கியூஎம் கழற்றி விட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பே இம்ரான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தவறான பொருளாதார கொள்கைகளால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இம்ரான் கான் அரசுதான் காரணம் என கூறி, அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இது பற்றி விவாதிப்பதற்காக சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கியது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இம்ரான் கான் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான எம்கியூஎம் கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது. இதனால், இம்ரான் கான் ஆதரவு ஆதரவு எம்பி.க்களின் எண்ணிக்கை 164 ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பலம் 175 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிருபிக்க 172 எம்பி.க்களின் ஆதரவு தேவை. இந்த பலத்தை இழந்து விட்டதால், வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடக்கும் முன்பாகவே இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே நேரம், இம்ரானின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தகவல் தொடர்பு துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, ‘இம்ரான் கான் ராஜினாமா செய்ய மாட்டார். கடைசி பந்து வரை களத்தில் நின்று ஆடுவார்,’ என்று கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.