கொடுத்த வாக்குறுதியை மீறியது கீவ் அருகே ரஷ்யா மீண்டும் தாக்குதல்!!
உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் நகரங்கள் மீதான தாக்குதல் குறைக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்த ரஷ்யா, நேற்றே இந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. கீவ் மற்றும் அதன் அண்டை நகரங்களின் மீது நேற்று தீவிர தாக்குதல் நடத்தியது. இதன் மூலம், ரஷ்யாவின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வெளியிட்ட சந்தேகம் உறுதியாகி இருக்கிறது. மேலும், இஸ்தான்புல்லில் 2ம் நாள் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் தூதுக்குழுவினர் நாடு திரும்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் நேற்று 35வது நாளாக தொடர்ந்தது. நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினாலும், ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ நாடுகளிடம் இருந்து பெற்று வருகிறார். இதனால், உக்ரைன் முக்கிய நகரங்களை சர்வ நாசமாக்கி வருகிறது ரஷ்ய ராணுவம். தலைநகர் கீவ், கார்கிவ், செர்னிவ், லிலிவ், மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ல முக்கிய நகரங்களில் ரஷ்ய ராணுவம் தரைவழி, வான்வழி தாக்குதல் மூலம் உயரமான கட்டிடங்களை எல்லாம் தரைமட்டாகி உள்ளது.
முதலில் ஆயுத உதவி இல்லாததால், பதுங்கி அடித்த உக்ரைன் படைகள் பல்வேறு நாடுகளில் உதவியால் ரஷ்ய படைகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. உக்ரைன் படைகள் தரைவழி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா ராணுவம் பல இடங்களில் பின்வாங்கி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக, கருங்கடலில் கப்பலை நிறுத்தி இலக்கை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக உக்ரைனின் பதிலடியால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது. இதனால், உக்ரைனை இரண்டாக பிரித்து, கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ரஷ்ய படைகள் கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கிடையே, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ரஷ்ய, உக்ரைன் தூதுக்குழுக்கள் இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில், ‘உக்ரைனில் உள்ள கீவ், செர்னிவ் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா பல மடங்கு குறைக்கும்’ என்று ரஷ்யா தெரிவித்தது.
மேலும், ரஷ்ய அதிபர் புடினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அடுத்த வாரம் சந்தித்து நேரடியாக பேசுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதன்மூலம், போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதே நேரம், ரஷ்யாவின் தாக்குதல் குறைப்பு அறிவிப்பை நம்ப முடியாது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஜெலன்ஸ்கியும் சந்தேகித்தார். இந்த சந்தேகம் நேற்று உறுதியாகி விட்டது. தாக்குதலை குறைக்கப் போவதாக அறிவித்த பின் கீவ், செர்னிவ் உள்ளிட்ட நகரங்களின் மீதான தாக்குதலை ரஷ்யா நேற்று முன்பிருந்ததை விட அதிகமாக தீவிரப்படுத்தியது. மேலும், 2வது நாளாக இஸ்தான்புல்லில் நேற்று நடக்க இருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்தானது. இருநாட்டு குழுக்களும் நாடு திரும்பின.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கீவ் அருகே ராணுவ நடவடிக்கையை குறைக்கும் என்று ரஷ்யாவின் அறிவிப்பை நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. வடக்கு நகரமான செர்னிவில் இன்னும் என்ன நடக்கிறது என தெரியவில்லை. உக்ரைன் படைகள் தங்களின் பாதுகாப்பு நடவடிக்கையை கைவிடக் கூடாது,’ என கூறியுள்ளார்.
நேட்டோ உச்சி மாநாடு உக்ரைனுக்கு அழைப்பு
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு வரும் ஏப்ரல் 6, 7ம் தேதிகளில் பிரஸ்சல்சில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜார்ஜியா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய உறுப்பினர் அல்லாத நாடுகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ரூபிளில் தான் வர்த்தகம் மிரட்டும் ரஷ்யா
ரஷ்ய மீது அமெரிக்கா, நேட்டோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்து உள்ளன. இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. ரூபிள் மதிப்பை மீட்டெடுக்க, உலக நாடுகள் தங்களுடனான வர்த்தக்கத்திற்கு ரூபிள் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருந்தார். ரஷ்யாவின் இந்த கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்துள்ளன. ரூபிள்களில் பரிமாற்றம் செய்தால், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை குறைப்பது போலாகி விடும் என்று தெரிவித்துள்ளது. ஜெர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் கூறுகையில், ‘ரூபிள்களில் செலுத்தப்படாவிட்டால் எரியாவு விநியோகத்தை நிறுத்தலாம் என்ற ஆரம்ப எச்சரிக்கையை ரஷ்யா தூண்டுகிறது’ என்றார்.
ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 35 நாட்களாக கடும் தாக்குதல் நடத்தி, பல நகரங்களை நாசமாக்கி விட்ட போதிலும், ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் ராணுவம் ஏன் இன்னும் தாக்குதல் நடத்தாமல் இருக்கிறது என்ற கேள்வி கடந்த சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது நாட்டு எல்லையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் நகர், கிராஸ்னி ஒக்டியாப்ர் கிராமத்திற்கு அருகே உள்ள ஆயுதக் கிடங்கின் மீது நேற்று முன்தினம் இரவு உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், 4 ரஷ்ய வீரர்கள் காயம் அடைந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
உலக தலைவர்கள் இந்தியாவில் முகாம்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று சீனா வந்தார். இங்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் அவர், இந்தியாவில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் செய்கிறார். உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்தும், ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானங்களில் இந்தியாவும், சீனாவும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. இந்த சூழலில், ரஷ்ய வெளியுறத்துறை அமைச்சர் சீனா, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தியாவுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், ஜெர்மனி வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை ஆலோசகர் ஜென்ஸ் பிளாட்னர் ஆகியோர் நேற்றும், இன்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளை தீர்மானப்பதில் தலீப் சிங் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
40 லட்சம் அகதிகள்
ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து தற்போது 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளனர். இது, 2ம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் எண்ணிக்கையாகும். இவர்களில் 23 லட்சம் பேர் போலந்துக்கு சென்றுள்ளனர். 65 லட்சம் மக்கள் உக்ரைனுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.