பா.ஜ.க.வை வீழ்த்த இடதுசாரி, மத சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்!!

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டு கொடியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைத்தார். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-

வருகிற 6-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற உள்ளது. பா.ஜ.க நாட்டில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்களின் ஜனநாயக, குடியுரிமை பறிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றங்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்ய முடியவில்லை.

புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. அரசு மக்களை பிரித்து ஆள்கிறது. எனவே மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்று போராடி கொண்டிருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும், இடதுசாரி சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும். தேர்தலின்போது மதசார்பற்றவர்களை இணைத்து இந்துத்துவா சக்திகளை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் இடதுசாரிகளை பலப்படுத்துவதன் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. போன்றவற்றை வீழ்த்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.