விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்!!!!
உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து விளைவுகளுக்கும் மூலமானதும், மெய்ப்பொருளானதும், காலம், தூரம், பருமன், வேகம் எனும் கணிப்புக்கு அப்பாற்பட்டதும் ஆகிய மெய்ப்பொருளினைப் பற்றியும், ஐயுணர்வுகளாகவும், சிந்தனை ஆற்றலாகவும் உள்ள அறிவைப் பற்றியும் உணர்ந்து கொள்ளும் தெளிவு மெய்ஞ்ஞானம்.
இயக்கத்தைக் கண்டது விஞ்ஞானம். இயக்க மூலத்தை உணர்ந்தது மெய்ஞ்ஞானம்.
உடலை வளர்ப்பதும், அதை அழகுபடுத்துவதும் விஞ்ஞானம். உள்ளத்தை மேன்மையாக்குவதும், தூய்மையாக்குவதும் மெய்ஞ்ஞானம்.
வாழ்வில் சிறப்பளிப்பது விஞ்ஞானம். வாழ்வில் அமைதி தருவது மெய்ஞ்ஞானம்.
இயங்கி அறிவது விஞ்ஞானம். நிலைத்து உணர்வது மெய்ஞ்ஞானம்.
வாழ்வின் முன்னேற்றம் “விஞ்ஞானம்” வாழ்வின் சீர்திருத்தம் “மெய்ஞ்ஞானம்”.
வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம்.
துணைக் கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கி வருகிறது விஞ்ஞானம். உடற் கருவிகளைத் திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம்.
மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு, சலிப்பாக மாறாமல் அளவுகட்டிக் காவல் புரிய வல்லது மெய்ஞ்ஞானம்.
மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம் காக்கும். மெய்ஞ்ஞானத்தைப் புறக்கணித்த விஞ்ஞானம் வாழ்வின் வளமழிக்கும்.
மறைபொருள் விளக்கம் தான் மெய்ஞ்ஞானம். உருப்பொருள் விளக்கம் தான் விஞ்ஞானம்.
அறிவைப் பற்றி, உயிரைப் பற்றி, உயிருக்கும் மூலமெய்ப் பொருளைப் பற்றி அறிந்து கொள்வது மெய்ஞ்ஞானம். உடலைப் பற்றி, உணவைப் பற்றி, உலகைப் பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானம்.
அறிவின் சிறப்பு மெய்ஞ்ஞானம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லைன் வெங்கடேசன் தமிழ்நாடு ஜேர்ணலிஸ்ட் யூனியன்.