அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் வடகொரியா..!! – தென்கொரியா எச்சரிக்கை!!

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011-ம் ஆண்டு பதவியேற்றது முதல் அந்த நாடு தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும், வடகொரியாவும் கீரியும், பாம்புமாக மோதி வந்த சூழலில் திடீர் திருப்பமாக கடந்த 2018-ம் ஆண்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் நேரில் சந்தித்து பேசினர்.
உலகையே திரும்பிபார்க்க வைத்த இந்த சந்திப்பு வடகொரியாவின் அடாவடி போக்கில் மாற்றத்தை கொண்டு வந்தது. ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதிப்பதை வடகொரியா நிறுத்தியது. எனினும் இருநாட்டு தலைவர்கள் இடையே அடுத்தடுத்து நடந்த 2 பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால்தான் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியும் என அமெரிக்கா தெரிவித்தது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த வடகொரியா பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது. எனினும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை மட்டுமே வடகொரியா சோதித்து வந்தது.
இந்த சூழலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 24-ந்தேதி நீண்ட தூரம் செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன்கொண்ட ‘ஹவாசோங் 17’ ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வடகொரியா மீண்டும் நீண்ட தூர ஏவுகணை சோதனைகளுக்கு திரும்பியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஐ.நா.விடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் வடகொரியா அடுத்தக்கட்டமாக அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. அந்த நாட்டின் வடக்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள புங்கியே-ரி அணு ஆயுத சோதனை தளத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 சுரங்கபாதைகளை கொண்ட இந்த சோதனை களம், 2018-ம் ஆண்டு நடந்த டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் மூடப்பட்டது. சில வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் முன்னிலையில் சோதனை தளத்தை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் சோதனை தளத்தில் இடிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்துக்குள் இந்த கட்டுமான பணிகள் நிறைவடையலாம் என்றும், அதன்பிறகு வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தென்கொரியா அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அப்படி ஒருவேளை வடகொரியா அணு ஆயுதத்தை சோதித்தால், அது வடகொரியாவின் 7-வது அணு ஆயுத சோதனையாகவும், 4½ ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் முதல் சோதனையாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.