வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு (வயது 62). ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர். கடந்த சனிக்கிழமை தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சீர்கழிக்கு சென்றுள்ளார். மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாலகுரு மணமேடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, கிரில் கேட் பூட்டை உடைத்து, கதவை நெம்பி உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனைகள் செய்ய திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.