‘ஜெட்’ வேகத்தில் உயரும் பஞ்சு விலை…!!

திருப்பூர்: வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க, தமிழக நுாற்பாலைகள், நூல் உற்பத்தியை குறைத்துள்ளன.

பஞ்சு விலை, ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 89 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது:

கடந்த 2020 — 21ம் நிதியாண்டின் இறுதி காலாண்டில், ஒரு கேண்டி 43 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, இந்தாண்டு பிப்., மாதம் 78 ஆயிரம் ரூபாயை எட்டியது. கடந்த 30 நாட்களில் கேண்டிக்கு 11 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, தற்போது, வரலாறு காணாதவகையில் பஞ்சு விலை, 89 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது.

பஞ்சு விலை உயர்வு, தமிழக நுாற்பாலைகளுக்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு லோடு (150 பேல்) பஞ்சுக்கு 30 லட்சம் ரூபாய் செலவிட்டநிலையில், தற்போது 63 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நடைமுறை மூலதன தேவை இரட்டிப்பாகியுள்ளது. தரம் குறைந்த பஞ்சு வரத்தால், நுால் உற்பத்தி செலவினமும் அதிகரித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.