கழிவுகளை கொட்டி மாசுபடுத்தும் கொடுமை!!!

மதுரை: மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரோட்டோர கழிவு, குப்பை மற்றும் கட்டட இடிபாடுகளை வைகை ஆற்றுக்குள் கொட்டி மாசுபடுத்துகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் வைகை கரை ரோடு சீரமைக்கப்பட்டு வருகிறது. ரோட்டோரம் ஆங்காங்கே தனியார் கொட்டியுள்ள கட்டட இடிபாடுகள், குப்பையை மண் அள்ளும் இயந்திரம் மூலம் கான்ட்ராக்டர்கள் ஆற்றுக்குள் கொட்டுகின்றனர். கரையோரத்தை சமன்படுத்துவதற்காக இப்படி செய்வதாக கூறினாலும் குப்பையையும் சேர்த்து கொட்டுவது எந்த விதத்தில் நியாயம்.

ஏற்கனவே செல்லுார், ஆனையூர் பகுதி குடியிருப்பு கழிவுகள் அனைத்தையும் மாநகராட்சி வைகையாற்றுக்குள் நேரடியாக விடுகிறது.தற்போது அருள்தாஸ்புரம் – ஆரப்பாளையம் இடைப்பட்ட வைகையாற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் ரூ.12 கோடியில் நிலத்தடி நீரை சேகரிக்கும் வகையில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அருகிலேயே மாநகராட்சி கழிவுநீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.