காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு!!

புதுடில்லி : காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், கடந்த, 1989 – 90களில், காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. இதில் அவர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கான பண்டிட்கள், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக, காஷ்மீரி பண்டிட்கள் நலனுக்கான அமைப்பான, ‘ரூட்ஸ் இன் காஷ்மீர்’ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீரி பண்டிட்கள் மீது, 1989 – 1990, 1997 மற்றும் 1998ல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக, ஜம்மு – காஷ்மீரில், 200க்கும் மேற்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஒன்றில் கூட விசாரணை நடத்தப்படவில்லை.

காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விசாரிக்கக் கோரி, 2017ல் வழக்கு தொடரப்பட்டன. ஆனால், ‘சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டதால், உரிய ஆதாரம் கிடைக்காது’ என காரணம் கூறி, மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கு முன், பல வழக்குகளில், பல ஆண்டுகள் கடந்த பிறகும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில், சீக்கியருக்கு எதிராக நடந்த வன்முறை, குஜராத்தின் கோத்ராவில் நடந்த வன்முறைகள் தொடர்பாக பல ஆண்டுகளுக்குப் பிறகும், அது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதில் விசாரணை நடத்த உத்தரவும் பிறப்பித்துள்ளது.

அதுபோல, காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விசாரிக்கக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்ததை மறுசீராய்வு செய்ய வேண்டும். இதில் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மறுசீராய்வு மனு என்பதுதான், நீதிமன்ற நடைமுறையில் உள்ள கடைசி வாய்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.