விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்!!

பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். 
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. 

இவர்கள் சொத்துக்கள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :-
3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இவர்களது ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் சொத்துக்களில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 113 கோடியே 91 லட்சம் சொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. 
ரூ.335 கோடியே 6 லட்சம் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளன மொத்த நிதியில் 84.61 சதவீதம், வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, அமலாக்க இயக்குனரகம் தங்களுக்கு ஒப்படைத்த சொத்துக்களை விற்று ரூ.7,975.27 கோடியை ஈட்டி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.