இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: விருதுநகரில் ஐ.ஜி., ‘டீம்’ முகாம்!!
சென்னை : விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கூட்டு பலாத்காரம் குறித்து ஐ.ஜி. தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.
டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த இரு தினங்களுக்கு முன் 22 வயது இளம்பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
தாயுடன் வசிக்கும் அப்பெண்ணுக்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை அலைபேசியில் ‘வீடியோ’ எடுத்துள்ளார். வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை ஹரிஹரன் நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஹரிஹரன் உட்பட எட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் சிறுவர்கள். இவர்கள் ராமநாதபுரம் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி நேர் முகமாகவும் மறை முகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.