சுவீடன் பள்ளியில் கத்தி குத்து தாக்குதல்; 2 பெண்கள் பலி: மாணவர் சரண்!!

சுவீடன் நாட்டின் தெற்கே மல்மோ லத்தீன்ஸ்கோலா நகரில் மேனிலைப்பள்ளி ஒன்று அமைந்து உள்ளது.  இந்த பள்ளியில் இருந்து அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்த 18 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர், 2 பேரை கொன்று விட்டேன் என்றும், எங்கிருந்து பேசுகிறேன் என்ற விவரம் பற்றியும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.  நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.

கத்தி மற்றும் கோடாரி ஆகிய ஆயுதங்களை அந்த மாணவர் தன்னுடன் வைத்திருந்துள்ளார் என அந்நாட்டின் பல்வேறு ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.
அந்த பள்ளியில் கத்தி குத்து தாக்குதல் நடந்தபோது, 50 பேர் வரை இருந்துள்ளனர்.  பலத்த காயம் அடைந்த 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  எனினும், அதில் பலனின்றி அவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதனையடுத்து, பள்ளியை போலீசார் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  போலீசாரின் கார்களும், ஆம்புலன்சுகளும் வந்து குவிந்தன.
சம்பவ பகுதியை விரிவாக ஆய்வு செய்து, அந்த இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்த பின்பும், இந்த தாக்குதலுக்கான எந்த உள்நோக்கமும் இதுவரை தெரிய வரவில்லை என விசாரணை அதிகாரி ஆசா நில்சன் கூறினார்.  இன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுவீடனில் பள்ளியில் தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.  கடந்த ஜனவரியில், தெற்கு ஸ்வீடனில் உள்ள கிறிஸ்டியான்ஸ்டாட் நகரில் ஆசிரியர் மற்றும் மாணவரை தாக்கி காயப்படுத்திய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்லோவ் நகரில் நடந்த தாக்குதலை போன்றே இந்த சம்பவமும் நடந்துள்ளது.  அதில், ஒரு மாணவர் 45 வயது உடைய பள்ளி ஊழியரை தாக்கினார்.
கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில், மேற்கு நகரான ட்ரோல்ஹாட்டனில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இனவெறி தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலை நடத்திய நபர் பின்னர் போலீசாரால் கொல்லப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.