காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு ‘ஒய்’ பாதுகாப்பு!

புதுடெல்லி: இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். தீவிரவாதிகளின் பகிரங்க எச்சரிக்கை, தாக்குதல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பாஜ.வினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 11ம் தேதி வெளியான இந்த திரைப்படத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குனருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 7 முதல் 8 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் அவருக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.