‘கோபாலபுரம் குடும்பத்தை சொன்னால் செந்தில் பாலாஜிக்கு ஏன் கோபம் வருது?’

மதுரை : ”நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு மின்வாரியம் வழங்கிய, 4,442 கோடி ரூபாய் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக, கோபாலபுரம் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏன் கோபப்படுகிறார். அவர் பி.ஜி.ஆர்., நிறுவன பிரதிநிதியாக பேசுவதில் இருந்து, முறைகேடு நடந்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக எந்த சவாலையும் சந்திக்க தயார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சி, கார்ப்பரேட் ஆட்சியாக மாறிவிட்டது. பி.ஜி.ஆர்., ஒப்பந்தம் விவகாரத்தில் எனக்கு பதில் சொல்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி, பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.மத்திய அரசின் சுற்றுச்சூழல் என்.ஓ.சி., இரண்டு ஆண்டுகளாக கிடைக்கவில்லை என அமைச்சர் பொய் கூறுகிறார். அச்சான்று எப்போது வழங்கப்பட்டது என்பதற்கான சான்று உள்ளது.

இது லாபம் ஈட்டும் நிறுவனம் இல்லை. 2011ல் மேட்டூர் திட்டத்தில், 22 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனம், வருமான வரித்துறை நடவடிக்கைக்கு உள்ளானது. 33 கோடி மட்டுமே வைத்துள்ள இந்த நிறுவனத்திற்கு 4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் ஏன் கொடுக்கப்பட்டது என்பது தான் கேள்வி.இதன் பின்னணி என்னவென்றால், ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டது என்பது தான். கோபாலபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்று வருபவர்கள் யார் என விசாரித்தால் தெரியும். இதை தெரிவித்தால், செந்தில் பாலாஜிக்கு ஏன் கோபம் வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.