நிதிப்பற்றாக்குறை 3.8% ஆக குறையும்: நிதியமைச்சர்!!

2022 – 23ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில், மாநில மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61 %ல் இருந்து 3.80 சதவீதம் ஆக குறையும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன், முதல்முறையாக கடந்தாண்டு ஆக.,13ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டாக, அது தாக்கல் செய்யப்பட்டது. ஆக., 14ல், முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2022 – 23ம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்று முதன்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த பட்ஜெட்டில், ‘தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம்’ என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: திமுக அரசு வாக்குறுதி நிறைவேற்றி வருகிறது. இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றதும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கோவிட் பெருந்தொற்றின் 2 மற்றும் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. தீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை 4.61% ல் இருந்து 3.8% ஆக குறையும்.வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையில் கிடைத்த 3,200 ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள் தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன.

மாநில உரிமைக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பணிகள் பாதிக்கப்படும். வரும் நிதியாண்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உக்ரைன் போர் காரணமாக பணவீக்கம், வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். முதல்வரின் முகவரி என்ற புதிய துறை மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.