மகத்துவம் மிக்க மாகாளி!!!
அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் பல தாவரங்கள் மருத்துவ குணம்மிக்கவை. ஆனால், அது பற்றி அறியாமலேயே அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். பல நேரங்களில் அதன் அருமை தெரியாததாலேயே கடந்தும் போய்விடுவோம். அப்படி பலருக்கும் இன்னும் தெரியாமல் இருக்கும் மருத்துவ தாவரம் மாகாளிக்கிழங்கு. ஊறுகாயாக பயன்படுத்தப்படும் பெருநன்னாரி, வரணி, குமாரகம் என்றும் கூறுவோம். இதன் தாவரவியல் பெயர் Decalepis hamiltonil என்பதாகும். நன்னாரி வகையைச் சார்ந்தது மாகாளிக்கிழங்கு. நன்னாரி, சீமை நன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி என்று நன்னாரியில் 4 வகைகள் உள்ளன. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது.
நம் முன்னோர்கள் நன்றாக சாப்பிட்டு, நன்றாக உழைப்பவர்களாக இருந்தார்கள். இன்றோ நம்மால் நன்றாக சாப்பிட முடிவதில்லை, நேரத்திற்கும் சாப்பிட முடிவதில்லை. அப்படியே பிடித்த உணவை சாப்பிட்டாலும், அது செரிப்பதும் இல்லை. இதனால் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுகிறோம். உணவு சாப்பிட்டவுடன் அந்த உணவு நன்கு செரிப்பதற்கு இயற்கையாக நம் உடலில் ‘ஜடராக்கினி’ உற்பத்தியாகிறது. இந்த ஜடராக்கினி ஒழுங்காக வேலை செய்தால்தான் நாம் சாப்பிட்ட உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல், உணவு செரிமானம், உணவுக்கழிவுகள் வெளியேற்றம் என செரிமான மண்டலத்தின் அத்தனை வேலைகளும் சரியாக நடைபெறும். இந்த செயல்பாடு சரியாக நடைபெறுவதற்காகத்தான் ஊறுகாயை கண்டுபிடித்தோம். அதேவேளையில் உப்பு, காரம் சுவை மிகுந்த இந்த ஊறுகாயை அளவுக்கதிகமாகவும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் வலது கைக்கு எட்டாத வகையில், இலையின் இடப்பக்கமாக வைப்பார்கள். வெவ்வேறு விதமான வெவ்வேறு மருத்துவத்தன்மைகள் இருக்கின்றன. ஆனால், நீண்ட நாள் உபயோகத்திற்காக சிட்ரிக் அமிலம் போன்ற ரசாயனங்கள்(Preservatives) கலந்து கடைகளில் விற்கப்படும் ஊறுகாய் எல்லாம் சரியான ஊறுகாயே அல்ல. இவற்றில் சேர்க்கப்படும் ப்ரசர்வேடிவ்கள், நன்மை செய்யும் மைக்ரோபியல் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடும். சிலர் மாகாளிக்கிழங்கை சூடு என்று சொல்வார்கள். அது தவறு. உண்மையில் உடலில் சூடு இருந்தாலும் குளிர்ச்சிப்படுத்தும். வாயுத்தொந்தரவை மட்டுப்படுத்தும், கல்லீரலைத் தூண்டி உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும். பெருநன்னாரி என்று சொல்லப்படும் மாகாளிக்கிழங்கின் வேர்களை சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறோம். சிறுநீர் நன்றாகப் பிரியவும், வியர்வைப் பெருக்கியாகவும் செயல்படுகிறது. உடலில் உஷ்ணத்தை தணித்து, உரமாக்கக் கூடியது. ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு, பித்த நீக்கம், மேகநோய், பால்வினை நோய்களுக்கு நல்ல மருந்து. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை சித்த மருத்துவத்தில் பல தைலங்களிலும், லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கிறோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.