மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ!!!
மலர் என்றாலே மணம்தான்… அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். பூ சந்தன நிறத்தில் இருக்கும். காய்ந்த பிறகு ப்ரௌன் நிறத்துக்கு மாறிவிடும். மற்ற பூக்கள் காய்ந்த பிறகு மணம் குறைந்து, இழந்துவிடும். ஆனால், மகிழம்பூவோ காய, காய மேலும் அதன் நறுமணம் அதிகரிக்கும். இதனை மகிழம்பூவின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். அதனால்தான் தெய்வங்களுக்குக் கூட. காய்ந்திருந்தாலும் மகிழம்பூவினை மாலையாக அணிவிக்கிறார்கள். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் தல விருட்சமே மகிழம் மரம்தான் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கும். மகிழ மரத்தின் காய், பழம், இலை, பூ, பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இவை குறித்தான சித்த மருத்துவ குறிப்புகள் அதிகம் கிடைக்கிறது. மகிழம்பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.