புடின் போர் குற்றவாளி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!!
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம் நசுங்கி வருகிறது. இருப்பினும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்தவில்லை. அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், புடின் மீது போர் குற்றவாளியாக அறிவித்து, அவர் மீது விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் முன்மொழிந்த இந்த தீர்மானத்தில், ‘அதிபர் புடினின் உத்தரவுப்படி ரஷ்ய படைகள் உக்ரைனில் மனித இனத்துக்கு எதிரான போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. அவர் மீது போர் குற்ற சட்டங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரவு அளித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.