ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் விமான நிலையம் மீது தாக்குதல்!!!

ரஷ்ய படைகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கெர்சன் விமான நிலையம், விமான தளம் மீது உக்ரைன் படைகள்  வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பல வாகனங்கள் சேதமடைந்தன. அதே நேரம், தலைநகர் கீவ்வுக்குள் நுழைய முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை கொண்ட நோட்டோ அமைப்பில் சேர விரும்பியதற்காக உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ம் தேதி முதல் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் தொடங்கி 21 நாட்களாகியும் தலைநகர் கீவ்வை கைப்பற்ற இயலாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ‘உக்ரைன் போரில் ரஷ்யா படைகளையும், தளவாடங்களையும் பெரும் அளவில் இழந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது. ரஷ்ய படையினரின் தாக்குதல்களுக்கு உக்ரைனும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. நாட்கள் செல்ல செல்ல ரஷ்யா கூடுதல் சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சிரியாவிலிருந்து 40,000 போர் வீரர்களை அழைத்து வந்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்து வைத்துள்ளது,’ என தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில், ‘‘உக்ரைனுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கியதற்காக அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க  அதிக ஆயுதங்கள் வழங்க வேண்டும். அதேபோல் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்யாவின் ஏவுகணைகள், போர் விமானங்கள் உக்ரைன் வான்வெளி பகுதிக்குள் வராதவாறு தடுக்க வேண்டும். உக்ரைனின் உள்ளே  இருக்கும் பகுதிக்குள் செல்ல முடியாமல் ரஷ்ய படை திணறி வருகிறது. ஆனால், நகரங்களின் மீது தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்துகிறது,’’ என்றார்.

தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே ரஷ்ய படைகள் குண்டு வீச்சில் ஈடுபட்டன. இதில் குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க ரயில் நிலையம் மற்றும்  பொது இடங்களை குறி வைத்து  தாக்குதல்கள் நடந்தன. குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 12 பேர் பலியாயினர். இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கீவ் தலைநகரின் மைய பகுதியில் இருந்து 15 கிமீ தொலைவில் ரஷ்ய படைகள் தற்போது நிற்பதாக தெரியவந்துள்ளது. அதற்கு மேல் ரஷ்ய படையால் முன்னேற முடியவில்லை. உக்ரைன் ராணுவத்தின் பதிலடியால் திணறி வருகிறது. ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்கும் கெர்சன் விமான நிலையம் மற்றும் விமான தளம் மீது உக்ரைன்  படைகள்  வெடிகுண்டு வீசி தாக்கியதில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பல  வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன,’’ என்றார்.

உடனே போரை நிறுத்த: உலக நீதிமன்றம் உத்தரவு: கடந்த 1948ம் ஆண்டைய இனப் படுகொலை சட்டத்தை மீறி, தனது நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக, ஐநா.வில் செயல்படும் உலக நீதிமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 2 வாரங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த இந்த நீதிமன்றத்தின் நீதிபதி ஜோன் இ டொனக்‌ஹு, உடனடியாக போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புடினுக்கு நேற்றிரவு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை புடின் மதிக்க மாட்டார் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச்சு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.  அவர்  உரையாற்றுகையில், ‘‘ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். எங்கள் நாட்டுக்கு போர் விமானங்கள் போன்றவற்றை அமெரிக்கா கொடுத்து உதவ வேண்டும்,’’ என்றார். முன்னதாக அவர் உரையாற்ற தொடங்கிய போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.