திலீப்பின் வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சாட்சிகளை கலைத்ததாக பார் கவுன்சிலில் நடிகை புகார்!!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், நடிகையை பலாத்காரம் செய்த போது எடுக்கப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகர் திலீப், அவரது தம்பி, தங்கையின் கணவர் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சதித்திட்டம் தீட்டியது குறித்த விவரங்களை திரட்டுவதற்காக திலீப், அவரது தம்பி, தங்கை கணவரின் செல்போன்களை பரிசோதிக்க வேண்டும் என்று குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பயன்படுத்திய 6 செல்போன்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செல்போன்கள் பின்னர் திருவனந்தபுரத்திலுள்ள அரசு தடயவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனை அறிக்கையை குற்றப்பிரிவு போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், திலீப் தன்னுடைய செல்போன்களில் உள்ள முக்கிய விவரங்களை அழித்து விட்டார் என்றும், அதற்கு அவரது வக்கீல்கள் உதவி செய்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திலீப்பின் வக்கீல் ராமன் பிள்ளைக்கு எதிராக பாதிக்கப்பட்ட நடிகை எர்ணாகுளம் பார் கவுன்சிலில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்ப தாவது: திலீப்பின் வக்கீல் ராமன் பிள்ளை இந்த வழக்கில் பல சாட்சிகளை கலைத்துள்ளார். விசாரணையின் தொடக்க கட்டத்தில் எனக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பல்டி அடித்ததற்கு ராமன் பிள்ளையின் தலையீடுதான் காரணமாகும். அவரும், அவரது உதவியாளர்களும் பல சாட்சிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கினர்.
பணம் வாங்காதவர்களை இவர்கள் மிரட்டியும் உள்ளனர். சாட்சிகளை எதிர்தரப்பு வக்கீல் எந்த காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாது. ஆனால், அதை மீறி ராமன் பிள்ளை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், திலீப்பின் செல்போனில் இருந்த விவரங்களை அழிப்பதற்கும் அவரது வக்கீல்கள் உதவி செய்துள்ளனர். இவை வக்கீல் தொழில் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, திலீப்பின் வக்கீல் ராமன் பிள்ளை மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.