பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் நம்பர் 1 மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி: 4வது சுற்றில் லெய்லா
இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார்.
3வது சுற்றில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதிய லெய்லா 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் நடப்பு சாம்பியன் பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை சொரிபிஸ் டொர்மோவை வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லெய்லா – பவுலா மோதுகின்றனர்.
பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா தனது 3வது சுற்றில் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் எலனா ரிபாகினாவிடம் (கஜகஸ்தான்) போராடி தோற்றார். எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் 6-3, 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவாவிடம் வீழ்ந்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது. கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவை மிக எளிதாக வீழ்த்தினார்.
மான்பில்ஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீரர் டானில் மெத்வதேவுடன் (26 வயது, ரஷ்யா) மோதிய ஜேல் மான்பில்ஸ் (35 வயது, பிரான்ஸ்) 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியுடன் (43வது ரேங்க்) மோதிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (5வது ரேங்க், கிரீஸ்) 6-1, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்), நிக் கிரிஜியோஸ் (ஆஸி.), யானிக் சின்னர் (இத்தாலி), கேமரான் நோரி (இங்கிலாந்து), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.