‘கீவ்’ நகர் சுற்றி வளைப்பு: ரஷ்யா தாக்குதல் தீவிரம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘நேட்டோ’ அமைப்பைச் சேர்ந்த மூன்று நாடுகளின் தலைவர்கள் கீவ் நகர் செல்வதாக அறிவித்துள்ளனர்.

ரஷ்ய ராணுவம், 21 நாட்களாக கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இடையில் சில நாட்கள் தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷ்ய படை, மீண்டும் உக்ரைன் நகரங்கள் மீது தொடர்ந்து குண்டு மழை பொழியத் துவங்கியுள்ளது. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

ரஷ்ய படைகள் மரியுபோல் துறைமுக நகரை சுற்றி வளைத்துள்ளன. இதை அடுத்து, 160க்கும் மேற்பட்ட கார்களில் மக்கள் பாதுகாப்பான வழியில் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே ரஷ்ய படைகள் மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டதாக கூறப்படுவதை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது.

உக்ரைனின் வடகிழக்கு நகரங்களான இர்பின், ஹோஸ்டோமெல், புக்காவிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. கீவ் நகரையும் ரஷ்ய படையினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆங்காங்கே இடிந்து விழுந்த கட்டடங்களின் கற்குவியல்கள் மலைபோல காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வாரங்களாக சுரங்கப் பாதையிலும், பாதாள அறைகளிலும் பதுங்கியுள்ள மக்கள், உணவு, தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். உயிருக்கு அஞ்சி வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மைகோலைவ், செர்னிவ் நகரங்களிலும் இரவு பகலாக குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், கீவ் நகருக்குச் செல்வதாக அறிவித்துள்ளனர்.இதற்கிடையே போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையிலான சமரச பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.