கீவ் மையப்பகுதியை நெருங்கியது ரஷ்யா: உக்ரைன் அதிபருடன் அண்டை நாட்டு பிரதமர்கள் சந்திக்க திட்டம்!!!!
உக்ரைன் தலைநகர் கீவ்வின் புறநகர்களில் சண்டையிட்டு வந்த ரஷ்ய படைகள், தற்போது நகரின் மையப்பகுதியை நெருங்கி உள்ளன. நேற்று அதிகாலையில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தை குண்டுவீசி தகர்த்த ரஷ்ய ராணுவம், கீவ்வில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையையும் அழித்தது. போர் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளின் பிரதமர்கள் சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டையே முற்றிலுமாக சிதைத்து வருகிறது. சுமார் 10 நாட்களாக மரியுபோல் நகரில் தாக்குதல் நடத்தி, அந்நகரையே உருக்குலைத்து விட்டது. கார்கிவ் உள்ளிட்ட நகரங்களிலும் மருத்துவமனைகள், வர்த்தக கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்டிடங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களாக தலைநகர் கீவ்வின் புறநகர் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தலைநகருக்குள்ளும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. 20வது நாளாக போர் நேற்றும் தொடர்ந்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் புறநகரில் அமைந்துள்ள இர்பின், ஹோஸ்டோமெல் மற்றும் புச்சா போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை தலைநகர் கீவ்வில் உள்ள மிகப் பெரிய 15 மாடி குடியிருப்பு கட்டிடம் தகர்க்கப்பட்டது. குண்டுவீச்சில் கட்டிடத்தில் பயங்கர தீ பரவியதால், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அங்கு தங்கியிருந்த மக்களை காப்பாற்றினர். இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 2 பேர் பலியாகினர். கட்டிடம் முற்றிலும் வசிக்க தகுதியற்றதாக உருக்குலைந்து போயுள்ளது. கட்டிடத்தின் அருகில் உள்ள ரயில் நிலைய நுழைவாயில் பகுதியும் சேதமடைந்தது. இதனால், இனி அந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கீவ் பிராந்திய தலைவர் ஓலெஸ்கி குலேபா அளித்த பேட்டியில், ‘‘தலைநகரின் பல தெருக்கள் இரும்பு, கான்கிரீட் சிதறல்களால் நிரம்பி உள்ளன. மக்கள் சுரங்க ரயில் நிலையங்களில் தொடர்ந்து தஞ்சமடைந்துள்ளனர். நகரை விட்டு வெளியேறுவதற்கு கூட அவர்கள் அஞ்சி வெளியே வர மறுக்கின்றனர்,’’ என்றார். இதே போல், தலைநகர் கீவ்வில் உள்ள அமைந்துள்ள மிகப் பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையான ஆன்டனோவ் விமான தொழிற்சாலையை ரஷ்ய படைகள் முற்றிலும் அழித்துள்ளன. ஏற்கனவே, உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை தாக்கி தகர்த்த ரஷ்யா தற்போது விமான உற்பத்தி ஆலையையும் அழித்து விட்டது.
இதுவரை ரஷ்ய ராணுவம் 900 ஏவுகணைகளை ஏவி இருப்பதாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட மருத்துவமனை, கிளீனிக் உள்ளிட்ட சுகாதார மையங்களின் சில பகுதிகளில் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டதாகவும் உக்ரைன் அரசு கூறி உள்ளது. தற்போது ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வின் மையப் பகுதியில் இருந்து 15 கிமீ தொலைவில் முகாமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால், இன்னும் அடுத்த சில நாட்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி தலைநகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் உச்சகட்ட போரில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய படைகள் மிகவும் நெருக்கத்தில் வந்து விட்டதால், தலைநகர் கீவ் இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. ரஷ்ய படையிடம் விரைவில் அது வீழலாம் என கருதப்படுகிறது.
போர் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க கீவ்வுக்கு புறப்பட்டனர். உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவை உறுதிபடுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று போலந்து அரசு கூறியது. வீரர்கள் எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும் ரஷ்யா மிகப்பெரிய படையாக இருந்தாலும், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவதால் இவ்வளவு நாளும் உக்ரைனால் போர்களத்தில் தாக்குபிடிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. 20 நாள் போரில் இதுவரை 28 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.