இந்திய மாணவர்கள் நிம்மதி ஆன்லைன் வகுப்பை தொடங்கிய மருத்துவ பல்கலைக் கழகங்கள்!!

உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக் கழங்களில் ஏராளமான இந்திய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் சிக்கிய 18,000 மாணவர்களை ஒன்றிய அரசு பத்திரமாக மீட்டு திரும்ப அழைத்து வந்துள்ளது. ஆனாலும், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை முடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு ஒன்றிய அரசு உதவும் என நாடாளுமன்றத்திலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள சில மருத்துவ பல்கலைக் கழகங்கள் நேற்று முன்தினம் முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன. உக்ரைனில் பெரும்பாலான மருத்துவ பல்கலைக் கழகங்கள் மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. மேற்கு உக்ரைன் போரால் பெரிய அளவில் பாதிக்கப்படாத பகுதியாக உள்ளது. இதனால் அங்குள்ள டேனிலோ ஹலிட்ஸ்கை லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக் கழகம், இவானோ பிரான்கிவிஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக் கழகம், வின்னிட்சியா தேசிய பல்கலைக் கழகம் ஆகியவை நேற்று முன்தினம் முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன.

இதைத் தொடர்ந்து பிற பல்கலைக் கழகங்களும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளன. இந்தியா திரும்பிய பல மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் இணைந்து கல்வியை தொடர்கின்றனர். இதனால், அவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர். மாணவர்கள் கூறுகையில், ‘எதுவும் இல்லாத நிலையில் ஆன்லைன் வகுப்பாவது நடப்பது நிம்மதி தருகிறது. பேராசிரியர்கள் பதுங்குகுழி மற்றும் தஞ்சமடைந்த இடங்களில் இருந்து வகுப்பை நடத்துகின்றனர். புதிய டைம்டேபிள்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வகுப்புகளை நடத்துவதாக ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்,’ என்றனர். தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடைமுறை வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் இருப்பது மாணவர்களிடையே பெரும் கவலையாக உள்ளது.

* சிறு நாடுகளாக உடைக்க புடின் மாஸ்டர் பிளான்
ராணுவத்தை ஏவி உக்ரைன் நாட்டை நாசக்காடாக்கி வரும் ரஷ்ய அதிபர் புடின், இந்த இந்த நாட்டை துண்டு துண்டாக உடைத்து பல தனி நாடுகளை உருவாக்க திட்டமிட்டு வருகிறார். இந்த இடங்களில் தனது கைப்பாவைகளை தலைமை பொறுப்பில் நியமித்து, அவற்றை ஆட்டிப் படைக்கும் மாஸ்டர் பிளானை செயல்படுத்துவார் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். உக்ரைன்  போரின் ஆரம்ப கட்டத்திலேயே பெரிய நகரங்களில் ஒன்றான கெர்சனை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து, அந்நகர அரசு அதிகாரிகள் தங்களுடன் ஒத்துழைக்க வேண்டுமென நிர்பந்தித்தது.

குறிப்பாக, ‘கெர்சன் மக்கள் குடியரசு’ என தனி நாடாக இதை பிரகடனப்படுத்த வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அறிவுறுத்தியது. ஆனால், கெர்சன் மக்கள் கீழ்படியவில்லை. அதேபோல்,  மெலிடோபோல், பெர்டியன்ஸ்க் போன்ற மற்ற நகரங்களை சேர்ந்த மக்களும், அதிகாரிகளும் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் அனைவரும் தாங்கள் உக்ரேனியர்கள் என்ற நாட்டுப்பற்றுடன் உள்ளனர். இதனால், ரஷ்யா கூறுவது போன்ற வாக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என அறிவிக்கும் தீர்மானத்தை கெர்சன் பிராந்திய கவுன்சில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய ராணுவம், இதற்கு பதிலடியாக, புதிதாக ஆக்கிரமித்த இப்பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டி வருகிறது. அடிபணியாத மெலிடோபோல், டினிப்ரோருட்னே நகர மேயர்களை கடத்திச் சென்றது. மெலிடோபோலில் தற்போது கலினா டானில்சென்கோ என்பவர் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச்சின் கட்சியில் இருந்தவர். இவரைப் போன்றவர்களை உக்ரைனை பல சிறு நாடுகளாக உடைத்து, அங்கு தனது கைப்பாவைகளாக நியமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

‘கடந்த 2014ல் டோன்பாஸ் பகுதியை ஆக்கிரமித்த போது இதே வேலையை ரஷ்யா செய்தது. தற்போது, அதே பணியை உக்ரைன் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா செய்யும். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த மற்ற நாடுகளிலும் இதுபோன்ற ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதே ரஷ்யாவின் எதிர்கால திட்டம். இது, நேட்டோ அமைப்பில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் மால்டோவா, ஜார்ஜியோ போன்ற அண்டை நாடுகளுக்கு ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது,’ என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.