ஜி- 7, நேட்டோவை தவிர உலகளவில் புது கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முடிவு!!

 நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன்  மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் சாகி நேற்று அளித்த பேட்டி வருமாறு: சீனா மட்டுமின்றி இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார போரில் பங்கேற்கவில்லை. ஆனால், இது ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக கருத முடியாது. ஜி-7, நேட்டோ அமைப்புகளுக்கு அப்பால், உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக அமெரிக்கா பணியாற்றி வருகிறது. அதில், வெற்றியும் பெற்றுள்ளது.

அதேபோல், ஒவ்வொரு நாடும் அவர்கள் எங்கு நிற்க வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்ககைகளின் விளைவுகள், அந்த நாட்டையும், அதன் பொருளாதாரத்தையும் சரிவின் விளிம்பிற்கு எடுத்துச் செல்லும். காலப்போக்கில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பொருளாதார தடைகளையும் மீறி, ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை சீனா ரஷ்யாவிற்கு பொருளாதார உதவி வழங்க முடிவு செய்தாலோ அல்லது ரஷ்யாவிற்காக கூடுதல் சலுகைகளை வழங்கும் நடவடிக்கைகளை எடுத்தாலோ அது உலக பொருளாதாரத்தில் 15 முதல் 20 சதவீதமாக மட்டுமே இருக்க முடியும். இதற்கான எதிர்வினைகளையும் சீனா அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.