டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் 2ம் தேதி திறப்பு விழா!!
டெல்லியில் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக.வின் டெல்லி கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார். இதற்காக, ஒருநாள் பயணமாக ஏப்ரல் 2ம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வரும் அவர், தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்குகிறார். மாலை 5 மணிக்கு ‘டெல்லி அண்ணா அறிவாலயம்’ என்ற பெயரிலான திமுக.வின் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்க உள்ளார். அன்று இரவே மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில், இந்த அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை நேரில் சந்தித்து, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று அழைப்பு விடுத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.