பிரான்சில் பள்ளிகள், அலுவலகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை!

பிரான்சில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள், அலுவலகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் உணவகங்கள், விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதையும், மருத்துவமனைகளில் நிலைமை மேம்பட்டிருப்பதையும் அடுத்து நிகழ் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புகள் நேற்று  முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதன்படி, உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேவேளையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல அண்மையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா தொற்றிலிருந்து அண்மையில் குணமடைந்ததற்கான சான்றைக் காண்பிக்க வேண்டும்.
பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.7 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸில் 12 வயதுக்கு மேற்பட்ட 92 சதவீதம்  பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 10,000 பேருக்கு ககொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது சரியான நடவடிக்கை இல்லை என நிபுணர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.